40 நாட்களில் நிறைவடைந்தது ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு!

Web Ads

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்ட காலத்தைவிட முன்னதாக படப்பிடிப்பை நிறைவு செய்ததற்கு நடிகர் ஜீவாவின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் M. சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

குறிப்பாக, படப்பிடிப்பு தொடங்கிய மேலூர் மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் படக்குழுவினர் கிடா வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கி, அப்பகுதி மக்களுடன் இணைந்து படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Web Ad 2

‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. இதனால், ஜீவாவின் திரைப்பயணத்தில் இப்படம் வித்தியாசமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். K.B. நந்தபாலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை அமைக்க, M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பையும், T. உதய் குமார் ஒலிப்பதிவையும் கவனிக்கின்றனர். அன்பு புகைப்படங்களை பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில், ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணியிலான இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.