அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் `ஒன்ஸ்மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Web Ads

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி புதிய ரிலீஸ் தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

காதல் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார்.

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவரது இசையில் வெளியாகியுள்ள ‘இந்திரா’ மற்றும் ‘வா கண்ணம்மா’ பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Web Ad 2

இந்தப் படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ராஜ் கமல் கலை இயக்கத்தையும், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.

முன்னதாக வெளியான டைட்டில் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணி, ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை மற்றும் காதலை மையமாகக் கொண்ட கதை ஆகியவற்றால் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.