ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போஸ்டரிலேயே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களமும், கிராமத்து மண்வாசனையும் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இந்த திரைப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரை பாராட்டியதாக கூறப்படுவது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இது அமையும் என்ற நம்பிக்கையை படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு, K.B. நந்தபாலன் கலை இயக்கம், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகள், M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பு, T. உதய் குமார் ஒலிப்பதிவு ஆகியவற்றை கவனிக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
