நடிகர் வைபவ்வின் தத் தவம் அஸி புதிய படம்!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே தொடங்கியது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட முன் தயாரிப்பு பணிகள், மூன்று மாதங்களுக்குள் முழுமையாக திட்டமிட்டு நிறைவு செய்யப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு துவக்க விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு உற்சாகமான ஆரம்பமாக அமைந்தது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற “மாளிகப்புரம்” திரைப்படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்ச்சிப்பூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். பிரேம் ஜி அமரன் இசையமைக்க, யுவன் செல்வா ஒளிப்பதிவை கவனிக்கிறார். பிரவீன் KL படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.
மேலும், ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.
தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு முக்கியமான படமான “ஆர்ய கேரள வர்மன்” திரைப்படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
