அனுமதி பெறாமல் பாடல்கள் ஒலிபரப்பு வழக்கு: ஐகோர்ட்டில் இளையராஜா இன்று ஆஜர்..
சென்னை ஜகோர்ட்டில் ‘இசைஞானி’ இளையராஜா இன்று ஆஜர் ஆனார். இது பற்றிய விவரம் வருமாறு:
இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை உரிமையை அவரின் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, இளையராஜா கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக, இளையராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
முன்னதாக, தனது மகள் பவதாரணியின் பிறந்த நாளான நேற்று 12-ம் தேதி, அவருடைய திதியும் இணைந்து வருவதை தொடர்ந்து, இளையராஜா குடும்பத்தினர் சார்பில் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, ‘பவதாரணியின் கடைசி ஆசை பெண்களுக்காக ஒரு இசைக் குழுவை தொடங்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் மலேசியாவில் இருந்தபோது, பல பெண்கள் என் முன்பு பாடினார்கள். அதை பார்த்ததும் தான் என் மகள், என்னிடம் சொன்ன அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. எனவே, அவருடைய ஆசையை நிறைவேற்ற, கூடிய விரைவில் பெண்களுக்கான இசைக்குழுவை துவங்க இருக்கிறேன்.
இந்த இசைக் குழுவில் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இடம்பெறுவார்கள் என்றும், நானே அவர்களை தேர்ந்தெடுக்க போகிறேன். மலேசியாவில் இரண்டு இசை குழுக்களை தேர்ந்தெடுத்துள்ளேன். உலகில் எங்கிருந்தாலும் இந்த இசை குழுவில் பெண்கள் சேரலாம். இந்த இசைக்குழு, மக்களுக்கு என்றென்றும் இசை விருந்து அளிக்கும்.
மேலும் ஆடிஷன் நடத்தப்பட்டு பாடகர் – பாடகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சரியான நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இந்த முடிவு பாராட்டுகளை பெற்று வருகிறது.
