விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்..
விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையமைக்க, அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படம் பற்றி சண்முக பிரியன் கூறியதாவது: ‘திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படம் இது.
கதை எழுதி முடித்ததுமே விக்ரம் பிரபு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்ததில்லை. கதையை கேட்டதும் உடனடியாக ஒப்புக் கொண்டார்.
கோபி செட்டிப்பாளையத்தில் கதை நடக்கிறது. ஹீரோ உசிலம்பட்டியில் துணிக் கடை வைத்திருக்கிறார். நாயகி சுஷ்மிதா பட் ஆசிரியை. இவர்களுக்கு எப்படி திருமணம் நடக்கிறது என்பது திரைக்கதை. படம் ஃபேமிலி டிராமா என்றாலும் நகைச்சுவையாகவும் இருக்கும். இந்த கதையுடன் அனைவரும் தொடர்பு கொள்ள முடியும்.
கோபி செட்டிப்பாளையத்தில் 120 வருட பழமையான வீடு ஒன்றில் சில காட்சிகளைப் படம் பிடித்தோம். படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன’ என்றார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.