ரவி மோகனின் கராத்தே பாபு பட முதல் பாடல் வெளியீடு!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘டாடா’ திரைப்பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து வரும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியாகியுள்ளது.
சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், அரசியல் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வமான திரில்லராக உருவாகியுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’ மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ள ‘ராசாதி ராசா’ பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அரசியல் சார்ந்த கருத்துகளையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் இந்தப் பாடல், வெளியானதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பல வெற்றித் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மூலம் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், சக்தி வாசு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் கணேஷ் கே. பாபு கூறுகையில், “அரசியல்வாதிகளை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து அதிகம் பேசப்படவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது. இது உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ரசிகர்களை கவரும்,” என்றார்.
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே. பாபு
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: எழில் அரசு கே.
படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்
தயாரிப்பு வடிவமைப்பு: சண்முகராஜா
இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்
சண்டைப் பயிற்சி: திலிப் சுப்பராயன்
ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்
நடன இயக்கம்: சதீஷ் கிருஷ்ணன்
ஆடை வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்ரமணியன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்
‘ராசாதி ராசா’ பாடலின் வெளியீட்டுடன் ‘கராத்தே பாபு’ படத்தின் இசை மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.