‘பிக் பாஸ்’ பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படப்பிடிப்பு விறுவிறுப்பு

Web Ads

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான விக்கல்ஸ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னரில், விக்கல்ஸ் விக்ரமுடன் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துவருகிறார். இருவரின் புதிய திரை ஜோடி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹரிஷ் கோமே படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சாகர் சந்தேஷ் இணைந்து தயாரித்து வருகிறார்.

Web Ad 2

ஏற்கனவே படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது 30 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளின் மூலம், மொத்த படப்பிடிப்பில் 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விக்கல்ஸ் விக்ரமும், பிட்னஸ் மாடலான ஆர்த்தி கிருஷ்ணாவும் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.