
நடிகர் சூரிக்கு ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் வந்த மலரும் நினைவுகள்
நினைவுகள் ரணமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். அது அன்றைய நிகழ்வுகளை பொறுத்து ஏற்படுகிறது. அவ்வகையில், சூரியின் நினைவலைகள் இதோ..
‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிய ராஜ், அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடிக்கின்றனர்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவைப் பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாக்கப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் திருச்சியில் நடந்து வருகிறது. அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரில் கட்டிட வேலை நடந்து வருகிறது. ஒருவர் சுவரில் தொங்கியபடி பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை வீடியோவாக எடுத்துள்ள சூரி, ‘விடாமுயற்சி’ பாடலுடன் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ‘சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். சூரி, சினிமாவுக்கு வருவதற்கு முன் பெயின்டராக வேலை பார்த்தார். அதை இப்போது நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.