சர்வதேச திரைப்பட விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “பொருநை” ஆவணப்படம் திரையிடத் தேர்வு

Web Ads

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பொருநை’ ஆவணப்படம், துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் என்ற பெருமையை ‘பொருநை’ பெற்றுள்ளது.

இதற்கு முன், ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘தமிழி’ ஆவணப்பட இணையத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட அந்தத் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘பொருநை’ ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி என அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருந்து, அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து பல ஆண்டுகள் உழைப்பின் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை பிரதீப்குமார் மற்றும் இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவை சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ் ஆகியோர் மேற்கொண்டுள்ள நிலையில், திலகேஷ் மற்றும் பரத்பாலாஜி படத்தொகுப்பை கவனித்துள்ளனர்.

ஆவணப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பாளராக மட்டுமின்றி, குரல் நெறியாள்கை மற்றும் இசையமைப்பாளராகவும் பங்களித்துள்ளார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது துருக்கியில் நடைபெறும் முக்கியமான தொல்லியல் மற்றும் பண்பாட்டு பாரம்பரிய திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள விழாவில் ‘பொருநை’ திரையிடப்படவுள்ளது. உலக அரங்கில் தமிழ் வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் இந்த சாதனை, தமிழ் ஆவணப்பட உலகிற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.