சமந்தாவின் ‘ப்ளாஸ்ட்’ ஆக்‌ஷன்… மிரட்டும் ‘எங்கள் தங்கம்’ ட்ரெய்லர் ரிலீஸ்!

Web Ads

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில், நடிகை சமந்தா அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. தெலுங்கில் உருவான இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதன் தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ட்ரெய்லரில் என்ன இருக்கிறது?

ட்ரெய்லரின் தொடக்கத்தில் சமந்தா தனது காதலரின் வீட்டுக்குள் நுழைகிறார். அங்குள்ள குடும்பத்தினர் அவரிடம், “உன்னை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?”, “எந்த ஊர்?”, “என்ன சாதி?” என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு குற்றவாளியைப் போல விசாரிக்கின்றனர். மேலும், அந்த வீட்டின் மருமகளை ‘எங்கள் வீட்டுத் தங்கம்’ என்று கொண்டாடுகின்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக வாய்ஸ் ஓவரில் பேசும் சமந்தா, “ஒரு சிறந்த மருமகளாக இருக்க அழகு, அடக்கம், சமையல் என பல தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு அப்படி எதுவும் தெரியாது. ஆனால், என் உயிரைப் பணயம் வைத்தாவது என் குடும்பத்தை நான் காப்பேன்” என்று ஆவேசமாகப் பேசுகிறார்.

சேலையில் சமந்தாவின் அதிரடி சண்டைக்காட்சிகள்!

குடும்பப் பெண்ணாகக் காட்டப்படும் சமந்தா, அடுத்தடுத்த காட்சிகளில் சேலை கட்டிக்கொண்டே எதிரிகளைப் பறக்கவிட்டு அடிக்கும் சண்டைக் காட்சிகள் ட்ரெய்லரை ஆக்கிரமிக்கின்றன. சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ப்ளாஸ்ட்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை நினைவூட்டும் வகையில் இதன் சண்டைக் காட்சிகள் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தியேட்டரிலும் இந்த ஆக்‌ஷன் காட்சிகள் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கோணத்தில் கேங்ஸ்டர் கதை: ஒரு முன்னாள் கேங்ஸ்டர், தனது பழைய வாழ்க்கையை விட்டு விலகி குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் கதைகள் இதுவரை ஆண்களின் பார்வையில் மட்டுமே அதிகம் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஒரு பெண்ணை மையமாக வைத்து இந்த கேங்ஸ்டர் கதை சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

படத்தின் பின்னணி மற்றும் ரிலீஸ் தேதி:

  • கதை உருவாக்கம்: ‘ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டிகே (Raj & DK)

  • இசை: சந்தோஷ் நாராயணன்

  • நட்சத்திரப் பட்டாளம்: திகந்த், குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி மற்றும் பலர்.

ஆக்‌ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது.