உதயநிதி மீது தயாரிப்பாளர் போட்ட வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Web Ads

‘ஏஞ்சல்’ திரைப்படம் தொடர்பாக பதிலளிக்க உதயநிதிக்கு ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில் ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராமசரவணன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இச்சூழலில், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் `துருவ நட்சத்திரம்’ மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு-2, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘ரா ரா ராஜசேகர்’ என வெளிவராத திரைப்படங்களின் பட்டியல் நீள்கிறது. இதில், ‘மத கஜ ராஜா’ படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

high court order to udhayanidhi stalin due to angel producer case