Pushpa 2

விடாமுயற்சி-வணங்கான்: அஜித்துடன், இயக்குனர் பாலா நேரடியாக மோதல்?

தமிழ்த்திரையில் சேது படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்வகையில், இயக்குனர் பாலா படம் வருகிறது என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இந்நிலையில், சூர்யாவுக்கு பதில் தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. இப்படத்தை சுரேஷ் காமாட்சி உடன் இணைந்து பாலாவும் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் படம், ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

அதன்படி, வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் படத்தை திரைக்கு கொண்டுவர பாலா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வணங்கான் படத்தை ரிலீஸ் செய்ய பாலா முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

முன்னதாக, அஜித்துக்கும் இயக்குனர் பாலாவுக்கும் ‘நான் கடவுள்’ பட விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டு, பெரிய விவாதப் பொருளாக மாறியது. அவ்வகையில், முதன்முறையாக அஜித்துடன் நேருக்கு நேர் பாக்ஸ் ஆபிஸில் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி மட்டுமல்ல, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த இரண்டு பிரம்மாண்ட படங்களுக்கு மத்தியில் தன்னுடைய ‘வணங்கான்’ படத்தை ரிலீஸ் செய்யும் பாலாவின் முடிவு அவருக்கு பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

எது எப்படியாயினும், ரசிக்கத் தகுந்த ஓர் திரைப்படம், யார் நடித்தாலும் வெல்லும் என்பது தானே திரை வரலாறு.!