ஓடிடி.யில் ‘பராசக்தி’ படம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றது.
1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு சுமார் 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது.
சென்சார் சொன்ன மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனம், படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டு உள்ளது. இதை ஆவலுடன் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் சுவாரஸ்யமும் அதே சமயத்தில் ஏமாற்றமும் ஏற்பட்டது.
அதாவது, பராசக்தி படத்தின் சென்சார் வெர்ஷனுக்கே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. அதேபோல், தற்போது அன்சென்சார்டு வெர்ஷன் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. “அன்சென்சார்டு வெர்ஷன்” என்றால் சென்சார் தரப்பில் கட் செய்யப்பட்ட அனைத்தும் படத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பார்த்தால்…
கிளைமாக்ஸில் வரும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை தொடர்பான காட்சிகள் முழுவதுமாக இடம் பெற்றுள்ளது. அதேபோல் வசனங்களில் ம்யூட் இல்லாமல் படம் ஸ்ட்ரீம் ஆகிறது. ஆனால், இந்த படத்தை அன்சென்சார்டு வெர்ஷன் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.
அதாவது படத்தில் ‘தீ பரவட்டும்’ என முதலில் இருந்தது, அது ‘நீதி பரவட்டும்’ என சென்சார் சொன்ன பிறகு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அன்சென்சார்டு வெர்சனிலும் ‘நீதி பரவட்டும்’ என்றே உள்ளது. அதேபோல், சிவகார்த்திகேயன் அறிமுக காட்சியில் ‘இந்தி அரக்கி’ என இருந்தது சென்சாரால் நீக்கப்பட்டது. அதேபோல், நீக்கப்பட்ட காட்சி தான் அன்சென்சார்டு வெர்ஷனிலும் உள்ளது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
