பியார் பிரேமா கல்யாணம் டிரெய்லர் வெளியீடு -ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்!

Web Ads

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், செந்தில், யோகிபாபு, சான்வி மேக்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே அதிக தைரியம் தேவைப்படும் நிலையில், இளனிடம் அந்த தைரியம் இருப்பதாக பாராட்டினார். டிரெய்லர் பல நகைச்சுவையான மற்றும் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

நடிகை ராதிகா சரத்குமார், இப்படம் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளதாகவும், இன்றைய தலைமுறையின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கை குறித்த மாறுபட்ட பார்வைகளை படம் பேசுவதாகவும் கூறினார். மேலும், படம் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 21 அன்று Netflix-ல் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நடிகர் செந்தில், இளன் நடிப்பையும் இயக்கத்தையும் பாராட்டியதுடன், அவரது கதாபாத்திரம் பழம்பெரும் நடிகர் பாக்யராஜின் நடிப்பை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டார். கதாநாயகி சான்வி மேக்னாவின் இயல்பான நடிப்பையும் அவர் பாராட்டினார்.

நடிகர் யோகிபாபு பேசுகையில், ‘ஸ்டார்’ திரைப்படத்தின்போதே இளன் தன்னுடன் படம் செய்வதாக கூறியிருந்ததாகவும், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இப்படத்தில் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், இளனுடன் இணைந்து பணியாற்றும் மற்றொரு படம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

நடிகை சான்வி மேக்னா, ஒரே நேரத்தில் இயக்குநராகவும் நடிகராகவும் இளன் செயல்பட்ட விதத்தைப் பாராட்டினார். உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் இயக்குநர் மற்றும் நடிகர் என இரு பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டதாக தெரிவித்த அவர், இப்படத்தில் முழுமையாக தமிழில் டப்பிங் பேசியிருப்பதாகவும் கூறினார்.

Web Ad 2

இயக்குநரும் கதாநாயகனுமான இளன், இப்படம் தனக்கு மிகவும் முக்கியமானது என்றும், இயக்குநராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் களமிறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் வகையில் கதையை உருவாக்கியுள்ளதாக கூறிய அவர், ராதிகா சரத்குமார், செந்தில் உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் தன்னை நம்பி நடித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், யுவன் சங்கர் ராஜா வழங்கிய இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும், ‘அட்ராசிட்டி’ பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் இளன் கூறினார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும், படத்தை முழுமையாக பார்த்துவிட்டதாகவும் தெரிவித்தார். படம் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளதாகவும், குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன் கணவரும் அதே வீட்டில் வசிக்க நேரிடும் சூழலை மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் திருமண வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ளது.

இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் Netflix தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Pyaar Prema Kalyanam Streaming on Netflix from August 21
Pyaar Prema Kalyanam Streaming on Netflix from August 21