பியார் ப்ரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளையே தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது.
டிரெய்லரில் சான்வி மேக்னா பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத இன்ஃப்ளூயன்சராக இருக்கிறார். இதனால் திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார்.
இதிலிருந்து தொடங்குகிறது வித்தியாசமான குடும்ப வாழ்க்கை. புதிய வீட்டில் முதல் சந்திப்பு, குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என மாப்பிள்ளையின் ஒவ்வொரு நாளும் புதுவித அனுபவமாக மாறுகிறது.
“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாகக் கொண்டு, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை சுவாரஸ்யமான கோணத்தில் இப்படம் அணுகுகிறது.
காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.
இளன், சான்வி மேக்னாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குநரும் கதாநாயகனுமான இளன் கூறுகையில், பரிச்சயமான ஒரு விஷயத்தை புதுமையான கோணத்தில் சொல்ல விரும்பியதாகவும், திருமணம் குறித்த நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கும் உறவை இப்படம் அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்தார். குடும்பத்தின் அன்பு, சிரிப்பு மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் கதையாக இப்படம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சான்வி மேக்னா, பவி தன்னம்பிக்கையும் சுதந்திரமான சிந்தனையும் கொண்ட கதாபாத்திரம் என்றும், தனக்கென தனித்துவமான அடையாளத்துடன் இருக்கும் அதே நேரத்தில் தான் நேசிக்கும் மனிதர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவள் என்றும் குறிப்பிட்டார்.
ராதிகா சரத்குமார், குடும்ப உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நகைச்சுவையுடன் இப்படம் பேசுவது தன்னை கவர்ந்ததாகவும், ஒவ்வொரு தலைமுறையும் திருமணத்தை வெவ்வேறு விதமாக அணுகுவதால் உருவாகும் சிரிப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
யோகி பாபு, படப்பிடிப்பில் நடைபெற்ற கலாட்டாவின் ஒரு சிறிய பகுதியே டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதாகவும், அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் இயல்பான சம்பவங்களிலிருந்தே படத்தின் நகைச்சுவை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… எண்ணற்ற கலாட்டாக்கள்!
மணமகள் வீட்டுக்குள் புதிதாக வரும் மாப்பிள்ளை, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி மாற்றுகிறார் என்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் மையக்கதை.
‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் வெளியாகிறது.