ரவி தேஜா – பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர் வெளியானது!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் திரையரங்க டிரெய்லர் இன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வெளியாகியுள்ள டிரெய்லர், குடும்ப உறவுகள், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த கதையை வெளிப்படுத்துகிறது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். மனைவி மற்றும் மகளை அன்புடன் கவனித்துக் கொள்ளும் அவர், தனது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் மகளாகவே கருதி பாதுகாக்கிறார்.
அதே நேரத்தில், மதுப்பழக்கம் அவரது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஆண்டுதோறும் ஐயப்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் அவர், அந்த காலகட்டத்தில் முற்றிலும் அமைதியான மனிதராக மாறுகிறார். இந்நிலையில், கிராமத்தில் அடுத்தடுத்து பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அந்த கொலைகளுக்கு ரவி தேஜா எப்படி முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.
அன்பான குடும்பத் தலைவராகவும், அநீதிக்கு எதிராக ஆக்ரோஷமாக களமிறங்கும் மனிதராகவும் ரவி தேஜாவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனது தந்தையின் கோபத்தைப் பார்த்து மகளே பயப்படுவதாக கூறும் காட்சி டிரெய்லரில் கவனம் ஈர்க்கிறது. அதேபோல், மதுவுக்கு அடிமையான கதாபாத்திரத்திற்கும், ஐயப்ப மாலை அணிந்த பிறகு வெளிப்படும் அமைதியான குணத்திற்கும் இடையேயான முரண்பாடும் கதாபாத்திரத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். குடும்பத்தின் அமைதியான வாழ்க்கைக்காக ஏங்கும் மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தந்தை-மகள் உறவின் உணர்வுகளை பேபி நக்ஷத்ரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார். சாய் குமார் குரு சுவாமியாகவும், ஸ்வாசிகா எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

டிரெய்லரின் இறுதியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘மல்லெபுல பல்லக்கி’ பாடலின் சிறிய பகுதியும் இடம்பெற்றுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
குடும்ப உணர்வுகளுடன் ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களை இணைத்து சிவா நிர்வாணா இப்படத்தை உருவாக்கியுள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஈர்க்கும் வகையில், உணர்வுகள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான பயணமாக ‘இருமுடி’ அமையும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
‘இருமுடி’ ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசலா லக்ஷ்மண், ராஜ்குமார் கசிரெட்டி, ரமண பார்கவ், கிஷோர் காஞ்சேரபாலெம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர்.
தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சிவா நிர்வாணா
தயாரிப்பாளர்கள் – நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர்
தயாரிப்பு நிறுவனம் – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா
தயாரிப்பு வடிவமைப்பு – சாஹி சுரேஷ்
படத்தொகுப்பு – பிரவீன் புடி