அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தனின் ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் ரிலீஸ்!

அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளன.
ஆர். கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, கலை இயக்கத்தை மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கவனித்துள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம், கவிதா பாண்டியன், அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ கனவுகளைப் பற்றிய திரைப்படம் என்றும், குறிப்பாக பெண்களின் கனவுகள், அதை அடைவதற்கான முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை காதல் மற்றும் உணர்வுகளுடன் இப்படம் பேசுவதாகவும் தெரிவித்தார்.
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் புதிய திரை இணை, அழகான காட்சியமைப்பு, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் கோவிந்த் வசந்தாவின் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ப்ரீத்தி முகுந்தன், ‘அன்பில் அவன்’ தனது இதயத்திற்கு நெருக்கமான படைப்பு என்றும், திருமணமாகாத பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக அசோக் செல்வனுக்கு நன்றி தெரிவித்தார்.
நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது நடிப்பில் வெளியாகும் திரைப்படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு படைப்பிலும் புதுமையான முயற்சியை மேற்கொள்ள விரும்புவதாகவும், ‘அன்பில் அவன்’ படத்தின் கதை ஏற்கனவே அறிமுகமானதாக இருந்தாலும், அதன் திரைக்கதை மற்றும் திரையரங்க அனுபவம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஏராளமான திரையரங்க தருணங்கள் இருப்பதாகவும், குறிப்பாக பெண்களை கவரும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார்.
“காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதுதான் ‘அன்பில் அவன்’ படத்தின் ஒன்லைன்” என்று கூறிய அவர், காதல் புத்திசாலியை முட்டாளாக்கவும், சாதாரணமான ஒருவரை சாதனையாளராகவும் மாற்றும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை ஏற்கனவே படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளதாகவும், கோவிந்த் வசந்தாவின் இசை இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அசோக் செல்வன் கூறினார்.
‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.