ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் நெகிழ்ச்சி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவி சங்கர், இயக்குநர் ராஜா கதை சொன்ன உடனேயே தங்களுக்கு பிடித்துவிட்டதாக தெரிவித்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களின் வரிசையில், நல்ல கதைக்களத்துடன் ‘மொத ராத்திரி’ உருவாகியுள்ளதாக கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சேத்தன், இயக்குநர் ராஜா கதை சொல்லும்போதே குடும்பமாக அமர்ந்து ரசித்ததாகவும், புதிய படக்குழுவினருக்கு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என்றும் தெரிவித்தார். இசையமைப்பாளர் பரத் சங்கர், இயக்குநர் ராஜா எளிமையான மனிதர் என்றாலும், அவரது இயக்கத்தில் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக கூறினார்.
இயக்குநர்கள் ஸ்ரீகணேஷ், கீர்த்தீஸ்வரன், பாரி, கார்த்திக் சுப்புராஜ், ‘அயலான்’ ரவிக்குமார் உள்ளிட்டோரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிறிய படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும், ‘மொத ராத்திரி’க்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இயக்குநர் பாரி கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ரிஷிகாந்த் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தைப் பார்க்கும்போது பாக்யராஜ் படங்களைப் பார்த்த உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இயக்குநர் ரவிக்குமார், ஒரு கதையை தேர்வு செய்து அதை சிறப்பாக படமாக்குவதில்தான் இயக்குநரின் திறமை இருப்பதாகவும், ரிஷிகாந்த் ஹீரோவாக அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டதை இப்படம் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது உரையில், படத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் பயணிக்க ஆதரவளித்த நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கூறிய அவர், சிறிய பட்ஜெட் படங்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றார். தனது அனுபவங்களிலிருந்து உருவான கதை இது என்றும், தனது வாழ்க்கையில் இடம்பெற்ற அனைத்து பெண்களுக்கும் இப்படத்தை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகை அனிஷ்மா, படத்தில் ‘முத்து செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறி, தன்னை தேர்வு செய்த இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
நாயகன் ரிஷிகாந்த் பேசுகையில், தனது முந்தைய கதாபாத்திரங்களை கவனித்து பாராட்டிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். ‘மொத ராத்திரி’ படத்தின் கதை முதலில் குறும்படமாக உருவாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சுமார் ஆறு ஆண்டுகள் பயணித்து முழுநீள திரைப்படமாக உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
தன்னை நம்பி தொடர்ந்து பயணித்த இயக்குநருக்கும், கதையின் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்த ரிஷிகாந்த், குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் படம் இருக்கும் என்றும், ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
