‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், குறிப்பிடத்தக்க வெற்றியையும் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் ரசிகர்களிடையேயும் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினர் சென்னையில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தனர். ஏற்கெனவே திரைப்படத்தை பார்த்திருந்த கமல்ஹாசன், படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் வெகுவாக பாராட்டியதுடன், படக்குழுவினரின் முயற்சிகளுக்கும் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது பாராட்டுகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார். கமல்ஹாசனின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்த சந்திப்பில் படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப், உன்னிமாயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
மலையாளத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ள இப்படம், தற்போது தமிழிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியிருப்பது படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளது.