கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உலகநாயகன் கமல்ஹாசனை சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சனிக்கிழமை சந்தித்தனர்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், திரையுலகின் முன்னோடியும், முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவருமான கமல்ஹாசனை சந்தித்து அவரது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் கேட்டறிந்ததாக எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் பல திறமையான எழுத்தாளர்கள் இருந்தாலும், அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த முன்னோடி எழுத்தாளராக கமல்ஹாசன் திகழ்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘குணா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட கமல்ஹாசன் உருவாக்கிய படங்களில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் வலிமையாகவும், கூர்மையாகவும் இருப்பதாகவும், சிறிய வசனங்களின் மூலம் கூட ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்தும் அவரது எழுத்து தனித்துவமானது என்றும் பாராட்டினர்.
இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், சங்கத்தை சிறப்பாக நடத்துமாறு வாழ்த்தி அறிவுறுத்தியதாகவும் எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கமல்ஹாசனுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததுடன், என்றும் நினைவில் நிற்கும் சிறப்பான தருணமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
