31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா ஜோடி!

Web Ads

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேரிகோல்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடியாக இணைகின்றனர். முன்னதாக ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

ரக்ஷன் மற்றும் நம்ரிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தென் தமிழகத்தின் வாழ்வியலையும், திருநெல்வேலி – தூத்துக்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலில் நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகிறது.

Web Ad 2

சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ஆர். நிர்மல் படத்தொகுப்பை கவனிக்கிறார். கிரியேட்டிவ் புரொடியூசராக சஞ்ஜெய் விஜய் ராகவண், கலை இயக்குநராக ஜி. துரைராஜ், நடன இயக்குநராக தீபு எம்., ஸ்டண்ட் இயக்குநராக அபிஷேக் ஸ்ரீனிவாசன் பணியாற்றுகின்றனர்.

பிரபு, சுகன்யா, ரக்ஷன், நம்ரிதா இணையும் ‘மேரிகோல்ட்’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.