விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்

Web Ads

துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா.

இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வருகிறது. சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் உடனிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, வாடகைத் தாயான மமிதா பைஜுவை தேடி அமெரிக்கா செல்கிறார் சூர்யா.

சூர்யாவின் வேண்டுகோளை ஏற்று சென்னை வரும் மமிதா, குழந்தையுடன் சில வாரங்கள் செலவிடுகிறார். இதனால் குழந்தை மீது அவருக்கு பாசம் ஏற்படுவதுடன், சூர்யா மீதும் காதல் மலர்கிறது. ஆனால் மமிதா பிரிந்து செல்லத் தயங்க, அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்ப சூர்யா முயற்சி செய்கிறார். மறுபுறம் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ராதிகா விரும்புகிறார். இறுதியில் இவர்களின் உறவு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

நடுத்தர வயது கதாபாத்திரத்தில் சூர்யா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. குடும்பக் கதைக்கு ஏற்ற வகையில் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

Web Ad 2

கலகலப்பான கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளிலும் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். சூர்யாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என துடிக்கும் தாயாக ராதிகா தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது காட்சிகள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.

ரவீனா டாண்டன் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார். சுனிலின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கதையோட்டத்துடன் பயணிக்கிறது. குடும்ப உறவுகள், காதல், நகைச்சுவை, எமோஷன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து குடும்ப ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

படத்தின் கலகலப்பான குடும்பக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக இன்டர்வெல் காட்சி சிரிப்புக்கு உத்தரவாதம். அதேநேரம், சில இடங்களில் லாஜிக் மீறல்கள் தெரிகின்றன.

மொத்தத்தில்: காதல், குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம்.

70%

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்

  • Rating