சிவாஜி வீட்டில் எனக்கு பங்கு இல்லை: ஜப்தி விவகாரத்தில், ராம்குமார்..

சிவாஜிகணேசன் வீட்டில் எனக்கு பங்கு இல்லை என தெரிவித்துள்ளார் ராம்குமார். இது பற்றிய தகவல்கள்…
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ராம்குமாரின் மகன் நடிகர் துஷ்யந்த், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளனர்.
இந்த கடனை உரிய வகையில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என தனபாக்கியம் நிறுவனம் தெரிவித்தது. அல்லது அதற்கு இணையாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அனைத்து உரிமைகளையும் துஷ்யந்த் வழங்காத நிலையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், துஷ்யந்தின் தந்தையான ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது முறையிடப்பட்டது.
அப்போது, சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லையெனவும், தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் தான் வீடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

