Pushpa 2

நீங்கள், பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள்: அமீருக்கு, பேரரசு கடும் கண்டனம்..

இளையராஜா கோவிலுக்கு சென்ற நிகழ்வு குறித்த விவகாரத்தில், அமீருக்கு பேரரசு கண்டனம் விடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பிய நிலையில், அது வெறும் வதந்தி என இளையராஜாவே டுவிட் போட்டு அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பது அனைவரும் அறிந்ததே.

இளையராஜாவுக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்த கோயில் நிர்வாகிகள் அவரை அர்த்த மண்டபம் வரை அழைத்துச் சென்ற நிலையில், திடீரென அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

‘என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’ என இளையராஜா தெளிவுபடுத்தினார்.

இதனிடையே இயக்குனர் அமீர், ‘இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதியில்லை. சனாதனம் தலைவிரித்தாடும் நாட்டில், சமத்துவம் எப்போது மலரும்? என்று அமீர் வழக்கம்போல, தனது வாட்ஸப்பில் போட்ட ஸ்டேட்டஸ் தீயாக பரவியது.

அமீரின் இந்த வாட்ஸப் ஸ்டேட்டஸுக்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். “இயக்குநர் அமீர் அவர்கள் நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதிவு போடுவது தேவை இல்லாத ஒன்று!.

அமீர் இஸ்லாத்தில் பற்று உள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். இஸ்லாத்தில் எத்தனையோ குறை இருக்கும். அதை சுட்டிக்காட்டி உங்கள் வீரத்தை காட்டுங்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள். பின், சனாதனத்தைப் பற்றி பேசலாம்’ என கூறியுள்ளார்.

இயக்குனர் பேரரசுவின் இப்பதிவு வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

perarasu slams ameer in ilaiyaraaja temple entry controversy issue
perarasu slams ameer in ilaiyaraaja temple entry controversy issue