என் மகளின் பெயரை மறவாத மணி சாருக்கு நன்றி: குஷ்பூ பெருமிதம்

மணிரத்னத்திற்கு குஷ்பூ உளமார நன்றி தெரிவித்துள்ளார். ஏன் என காண்போம்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவான படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அலி பசல் உள்பட பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாகவே நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் அன்பறிவ் சண்டைக் காட்சிகளில் டெக்னாலஜியாக இப்படம் அடுத்த கட்ட கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
பழைய கதையில், புதிய திரைக்கதையென வெளியாகிய இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷபூவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் அனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக பலர் பணியாற்றி இருக்கிறார்கள். அதில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவும் பணியாற்றியுள்ளார. இதுகுறித்து குஷ்பு தனது இன்ஸ்டா பதிவில்,
‘மணிரத்னம் சார் படத்தில் என் மகளின் பெயரும் வந்ததை பார்த்து, ஒரு பெற்றோராக நான் பெருமிதம் அடைகிறேன். மகளுக்கு முழங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, மணிரத்னம் படத்தில் கொஞ்ச காலம்தான் பணியாற்ற முடிந்தது. ஆனால், அந்த படத்தில் பணியாற்றியபோது மணிரத்னத்திடம் இருந்து என் மகள் நிறைய விஷயங்களையும் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். இது எனது மகள் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். இந்த அனுபவம் உண்மையிலேயே அற்புதமானது.
கொஞ்ச காலம் பணியாற்றியிருந்தாலும் என் மகளின் பெயரை மறக்காமல் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி மணி சார்’ என கூறி, டைட்டிலில் மகளின் பெயர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
