பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வரவேற்பு: தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

Web Ads

நூற்றுக்கும் மேற்பட்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்று, மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு அவர்கள் வரும்போது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவர்களை ஊக்குவிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘நம்ம நாட்டோட பெயர், நிம்மதி, சந்தோஷம் அதை கெடுக்க பயங்கரவாதிகள் கடல்வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரோட உயிரை வாங்கிடுச்சு.

இந்த கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் நடமாடினால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த, 100-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை வீரர்கள், கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர், மேற்கு வங்காளத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பேரணியாக சென்று வருகிறார்கள்.

அவர்கள் உங்கள் ஏரியாவுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களோடு கொஞ்ச தூரம் சென்று உற்சாகப்படுத்துங்கள்’ என ரஜினி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் மட்டுமின்றி நடிகர்கள் அமீர்கான், மாதவன் ஆகியோரும் இந்த பேரணிக்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, மகேந்திர சிங் டோனி ஆகியோரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் இந்த பேரணிக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை ஊக்குவித்துள்ளனர். மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் 11 மாநிலங்களை சைக்கிளில் கடக்க உள்ளனர்.

actor rajinikanth cisf cycle rally support