கமல் மன்னிப்பு கேட்கவில்லை; விசாரணை 10-ந்தேதி ஒத்திவைப்பு..
‘மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு ஈகோ தடுக்கிறது’ என தெரிவித்துள்ள நீதிமன்ற விசாரணை காண்போம்..
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ பட புரமோஷன் விழாவில் கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து கன்னடம் வந்தது’ என பேசியது பெரும் சர்ச்சையானது. கமல்ஹாசனை ‘மன்னிப்பு’ கேட்க வலியுறுத்தி கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்தது. கன்னடம், தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் கூறியுள்ளார்.
அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும்’ என தெரிவித்தனர். நீங்களே பிரச்சினையை உருவாக்கிவிட்டு பாதுகாப்பு கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
கமல் சாதாரண மனிதர் அல்ல, பொது நபர். கமல் தனது கருத்தை மறுக்கவில்லை, சொன்னது சரி என்கிறார். இப்போது படம் ஓட வேண்டும் எனக் கேட்கிறார். பல கோடி முதலீடு செய்திருக்கலாம், ஆனால், கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே, மன்னிப்பு தொடர்பாக முடிவெடுங்கள்’ எனக்கூறி வழக்கு விசாரணையை பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே கமல் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது, குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது.
நான் சொன்ன வார்த்தைகள் கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துவதற்காக சொன்னவை. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை’ என தெரிவித்தார்.
இதனிடையே இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தபோது, ‘கமல் ஏன் தனது கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கமலை ஈகோ தடுப்பதுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாவது ஒத்திவைக்கப்படுவதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 10-ந்தேதி ஒத்தி வைத்தனர். இந்நிகழ்வு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
