Pushpa 2

‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்

நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது ‘சூர்யா-45’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க, ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு, பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் பூஜை போடப்பட்டு அங்கிருந்து படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இப்படத்திற்கு முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்தார். தற்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு வருடம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் அவர், சூர்யா 45 படத்திலிருந்து விலகியிருப்பதால், அவருக்கு பதில் யார் இசையமைப்பாளர் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘கட்சி சேரா’, ‘ஆசை கூட’ போன்ற சுயாதீன பாடல்களுக்கு இசையமைத்து சென்சேஷனல் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இவர், பாடகர் திப்பு- பாடகி ஹரிணி ஜோடியின் மகன் ஆவார். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சாய் அபயங்கர், தனது 2-வது படத்திலேயே மாஸ் ஹீரோவுக்கு இசையமைக்க உள்ளதால், அடுத்த சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன இசையின் பரிணாம வளர்ச்சியில், சாய் படைக்கவிருக்கும் புதியதோர் இசை எப்படியென பொறுத்திருந்து பார்ப்போம்.!