உலக சினிமாவில் இதுவரை இல்லாத முயற்சி… ‘ONE MAN’ மூலம் தனி மனிதராக சாதித்த சங்ககிரி ராஜ்குமார்!

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தேவையான பல்வேறு பணிகளையும் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான புதிய முயற்சியாக ‘ONE MAN’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினரை பாராட்டினர்.
இந்நிகழ்வில் பேசிய சங்ககிரி ராஜ்குமார், திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் பிவிஆர் நிறுவனத்தினர் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா தனது ஸ்டுடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததையும் நினைவுகூர்ந்தார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பேசுகையில், முதலில் ஒரு மனிதர் அனைத்து வேலைகளையும் செய்து, அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார் என்ற தகவல் தன்னிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். ஆனால், திரைப்படத்தைப் பார்த்த பிறகு சங்ககிரி ராஜ்குமாரின் திறமையையும் உழைப்பையும் கண்டு வியந்ததாக தெரிவித்தார்.
“ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த தரத்தில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இது இந்தியத் திறமையின் உச்சம். அவருடைய உழைப்பு பெருமைப்படக்கூடியது. இது ஒரு வரலாற்றுப் பதிவு” என அவர் பாராட்டினார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், பெரிய படங்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய பொருளாதார பங்களிப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்தவிதமான பிரம்மாண்டமான பின்னணியும் இல்லாமல் சங்ககிரி ராஜ்குமார் தனி மனிதராக இத்தகைய மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார்.
“சினிமாவை காட்டுத்தனமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படியொரு முயற்சியை மேற்கொள்ள முடியும். சினிமா மூலமாக ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட கலைஞர் சங்ககிரி ராஜ்குமார். சினிமாவை நேசிக்கும் அனைத்து கலைஞர்களும் இந்தத் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் சேரன் பேசுகையில், சங்ககிரி ராஜ்குமாரின் முந்தைய படமான ‘வெங்காயம்’ திரைப்படத்தைப் பார்த்து வியந்ததாகவும், அதனை மீண்டும் வெளியிட்டு வெற்றி பெறச் செய்வதில் தனது பங்களிப்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.
“‘ONE MAN’ திரைப்படத்தில் அனைத்து வேலைகளையும் அவரே செய்திருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கிறார். ஆனால், எந்தக் கதாபாத்திரத்திலும் ராஜ்குமார் தெரியமாட்டார்; அந்தக் கதாபாத்திரம்தான் தெரியும். அந்த அளவிற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார்.
மேலும், குறைந்த பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதை சங்ககிரி ராஜ்குமார் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ் சினிமா அவருடைய படைப்புகளையும் திறமையையும் கொண்டாடும் என்றும் சேரன் தெரிவித்தார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘வெங்காயம்’ மற்றும் ‘பயாஸ்கோப்’ திரைப்படங்களைப் பார்த்து சங்ககிரி ராஜ்குமாரின் திறமையால் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
“‘ONE MAN’ என்றால் எப்படி? எல்லா வேலைகளையும் இவரே செய்கிறார் என்றால் அது எப்படி சாத்தியமானது? எனக்கு தற்போது வரை புரியவில்லை. இந்தத் திரைப்படத்தை மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கிறேன். ஊடக நண்பர்கள் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படம் மக்களைச் சென்றடைய பேருதவி செய்ய வேண்டும். இவர் வெற்றி பெற்றால்தான் இவரைப் போன்ற புதிய முயற்சிகளுடன் ஏராளமான இளைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவார்கள்” என சத்யராஜ் தெரிவித்தார்.
நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்காக ‘ONE MAN’ திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தைப் பார்த்தவர்கள் சங்ககிரி ராஜ்குமாரின் வித்தியாசமான முயற்சியையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.
சினிமா உருவாக்கத்தில் தனி மனிதராக புதிய சாதனையைப் படைத்துள்ள ‘ONE MAN’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
