Pushpa 2

ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகாமல் டிவி.யில் ஒளிபரப்பாகிறது: முழு விவரம்

சூப்பர் ஸ்டார் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் டிவி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:

ரஜினி காந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ‘லால் சலாம்’ ஓடிடிக்கு வராமலே, டிவி.யில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்..

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி… தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படத்தையும்
இயக்கினார்.

பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு.. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க, ‘லால் சலாம்’ என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மொய்தீன் பாய்’ என்கிற கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறியிருந்தார் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதுமட்டுமின்றி ரிலீஸ் சமயத்தில் இதை ரஜினி படமாகவே புரமோட் செய்திருந்தனர். ஆனால், படம் தோல்வியடைந்தது.

இதற்கு, ‘சில முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டுடிஸ்க் தொலைந்து போனதும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறியிருந்தார் ஐஸ்வர்யா. இதனால், படத்தின் ஓடிடி ரிலீசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

தொலைந்துபோன ஹார்டு டிஸ்க் மீண்டும் கிடைத்த பின்னரே அப்படத்தை ஓடிடியில் வெளியிட முடியும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறிவிட்டதால், இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

வருகிற டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஜீ சினிமா மற்றும் ஜீ டிவியில் ‘லால் சலாம்’ படத்தின் இந்தி வெர்ஷன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்படத்தின் தமிழ் வெர்ஷன் பற்றி இதுவரை எவ்வித அப்டேட்டும் வெளியாகவில்லை.

ரஜினி நடித்த படமல்லவா. அதனால், தமிழ் ரசிகர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள் என நினைத்து விட்டார்கள் போல.!