நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?
நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்..
நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம்.
பின்னர், அதற்கான டீசர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு சமயத்தில் நயன்தாரா தன்னுடைய மொபைலில் எடுத்த 3 வினாடி காட்சி இடம்பெற்று இருந்தது.
இதனை 24 மணிநேரத்தில் நீக்க வேண்டும். இல்லையெனில் 10 கோடி நஷ்ட ஈடு கொடுக்க நேரிடும் என எச்சரித்து நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை சரமாரியாக சாடியும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் ‘நானும் ரெளடி தான்’ படம் தான். அந்த படத்தை நடிகர் தனுஷ் தன்னுடைய ஒண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். அப்படத்திற்கு முன்னர் வரை தனுஷும் நயன்தாராவும் நட்போடு இருந்துள்ளனர்.
தனுஷ் மீதுள்ள நட்பின் காரணமாக தான் அவர் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு பாடல் காட்சியில் நடனமாடி இருந்தார் நயன்தாரா. அதன்பின்னர் தான் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் நானும் ரெளடி தான் படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக கமிட் செய்தார் தனுஷ். அப்படத்திற்கு முன்னர் வரை மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்தார் நயன்தாரா.
அதுமட்டுமின்றி போடா போடி படத்தின் தோல்விக்கு பின் தன் படத்தை தயாரிக்க ஆள் இன்றி தடுமாறிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கும் உதவ முடிவெடுத்து நானும் ரெளடி தான் படத்தை தயாரிக்க முன்வந்தார் தனுஷ்.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் சம்பளம் இன்றி இப்படத்தை 4 கோடியில் எடுத்து முடிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு தான் நானும் ரெளடி தான் படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட எகிறிவிட்டது.
இறுதியாக 16 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்து முடித்துள்ளார் விக்கி. அதிலும் கடைசி கட்டத்தில் தனுஷ் இதற்கு மேல் செலவிட முடியாது என பின்வாங்கியதை அடுத்து நயன்தாரா தன் சொந்த காசை போட்டு படத்தை எடுத்து முடித்ததாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி படம் ஓராண்டு தாமதமாக ரிலீஸ் ஆனதால் அதற்குள் வட்டியெல்லாம் சேர்த்து தனுஷுக்கு 20 கோடிக்கு மேல் செலவானதாகவும், நல்வாய்ப்பாக படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் நஷ்டமின்றி தப்பித்திருக்கிறார் தனுஷ். இருந்தாலும் இப்படத்தில் இருந்து தனுஷுக்கு பெரியளவில் லாபம் கிடைக்கவில்லையாம். பிரேக் ஈவன் மட்டும் வந்ததாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
அப்போதில் இருந்தே நயன்தாரா – தனுஷ் இடையே மோதல் இருந்துவந்த நிலையில், அது தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.
இவ்வளவு நாள் இதைப்பற்றி வாய் திறக்காமல் இருந்த நயன்தாரா தற்போது தனுஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பது அவர் தன் ஆவணப்படத்தை பிரமோட் செய்ய பயன்படுத்திய யுக்தி என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதன் காரணமாக தான் தனுஷ் அவரது அறிக்கைக்கு எந்தவித ரிப்ளையும் கொடுக்காமல்,
இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்படியோ, இன்று நயன் திருமண வீடியோ வெளியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.