13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் இணையும் நடிகை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிற மொழிக் கலைஞர்கள் அதிகம் நடிப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை மேக்னாராஜ் சார்ஜா நடிக்கவிருக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் தமிழ்த் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி, உயர்திரு 420, நந்தா நந்திதா என மூன்று படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை.
மலையாள திரைக்கு சென்ற மேக்னாராஜ் அங்கு பிசியாகி, மேலும் தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 13 ஆண்டுகள் கழித்து தமிழ்த்திரைக்கு திரும்பி வந்திருக்கிறார்.
இவர், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து, காதலை வீட்டில் சொல்லி அவர்கள் ஆசியுடன் 2018-ல் திருமணம் செய்தார். ஆனால், திருமணமான 2 ஆண்டுகளிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்தார் சிரஞ்சீவி சார்ஜா. அவர் இறந்தபோது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் மேக்னா. அப்பா இல்லாத குறை தெரியாமல் மகன் ராயனை வளர்த்து வருகிறார் மேக்னா. தன் மகனின் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ‘ஜெயிலர்-2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். மேலும், இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரும் இணையவுள்ளனர்.

