“எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” – வதந்திக்கு பாடகர் வேடன் மறுப்பு

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இசைக் கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பாக தான் அறிக்கை வெளியிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதுபோன்ற எந்த அறிக்கையையும் தான் வெளியிடவில்லை என்றும் வேடன் கூறியுள்ளார்.
சவூதி அரேபியா மட்டுமின்றி வேறு எந்த வளைகுடா நாட்டிலும் ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் திட்டம் தனக்கு இல்லை என்றும், இதுதொடர்பாக எந்த நிறுவனத்துடனும் கூட்டாண்மை அல்லது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவுக்கு தான் செல்வது நிகழ்ச்சிக் கலைஞராக, அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை அழைக்கும் ஒவ்வொரு நாட்டின் சட்டம், நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எப்போதும் மதித்து வருவதாகவும் வேடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் தனது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் வரவேற்பும் அதிகரித்து வரும் நிலையில், அதே காலகட்டங்களில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவது தற்செயலானதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது கலைப் பயணம், ரசிகர்களுடனான உறவு மற்றும் சர்வதேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனான தொழில்முறை உறவுகளை பாதிக்கும் நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“எந்தவிதமான பின்னணியும் இல்லாமல், வாய்ப்புகள் கிடைக்காத சூழலில் இருந்து என்னை நம்பிய மனிதர்களின் ஆதரவால் இன்று இருக்கும் இடத்தை அடைந்துள்ளேன். அந்த நம்பிக்கை எனது மிகப்பெரிய பொறுப்பு மட்டுமல்ல, மிகப்பெரிய பலமும் கூட” என வேடன் தெரிவித்துள்ளார்.
தவறான தகவல்களை பரப்பிய சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவரங்களை தனது குழு சேகரித்து பதிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள் எனது இசையையோ, எனது கலைப் பயணத்தையோ ஒருபோதும் தடுக்காது. எனது நிகழ்ச்சிகளில் சந்திப்போம்” என வேடன் தெரிவித்துள்ளார்.
