எங்களின் பிரைவசியை மதியுங்கள்: ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் பதிவு..
எங்களின் பிரைவசியை மதியுங்கள் என ஏ.ஆர். ரகுமானின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மூத்த இசையமைப்பாளராகவும் சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வந்தவர் ஏ.ஆர் ரகுமான். பல மேடைகளில் தன் மனைவி மீது உள்ள காதலை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்று ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன் கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில், கடந்த சில மாதங்களாகவே ரகுமான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும், இந்த சூழலில் சாய்ரா கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது என்றும், ரகுமானை பிரிந்து அவர் வாழ உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இருப்பினும், இந்த விஷயத்தில் ரகுமானின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1995-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணமானது. இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளனர். அதில் ஏற்கனவே மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இந்த தம்பதியின் இளைய மகன் ஏ.ஆர் அமீன் இப்போது இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தமிழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய தாய் தந்தையின் பிரிவை குறித்த தகவல் வெளியானது அவருக்கு மிகப்பெரிய மனக்கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த மாதிரியான நேரத்தில் எங்களின் ப்ரைவசியை மதிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய புரிதலுக்கு நன்றி’ என கூறியிருக்கிறார்.