முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்தது குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது 4 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளப் பதிவில் விஜய்யுடனான தனது பயணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

அதில், ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ மற்றும் ‘ஜனநாயகன்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் விஜய்யுடன் இணைந்து பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.

மேலும், “என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும், என் மீதான அளப்பரிய நம்பிக்கைக்கும் நன்றி விஜய் சார். இசை என்றும் நிலைத்திருக்கும்” என அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகியுள்ள நிலையில், அனிருத்தின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

AnirudhAnirudh’s Emotional Note on His Journey with Chief Minister VijayChief Minister Vijayvijayஅனிருத்விஜய்