சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய படக்குழுவினர்!

சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடுவதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், 23 ஆண்டுகளாக ஆர்ஜே மற்றும் தொகுப்பாளராக பல மேடைகளில் பயணித்திருந்தாலும், முதன்முறையாக பாடலாசிரியராக மேடையேறுவது தனக்கு மிக முக்கியமான தருணம் என தெரிவித்தார். இந்தப் படத்தில் அருண் ராஜா காமராஜுடன் இணைந்து பாடல்கள் எழுதியதாகவும், இந்த வாய்ப்பை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் வெங்கி அட்லூரிக்கு நன்றி என்றும் கூறினார்.

ஜி.வி. பிரகாஷ் குமாரை நண்பராக மட்டுமின்றி தனது ஆசானாக பார்ப்பதாகக் கூறிய அவர், வெங்கி அட்லூரியின் எழுத்தையும் வெகுவாக பாராட்டினார். “நீங்கள் பார்த்து ரசித்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’, வெங்கியின் ஆர்ட் மட்டுமல்ல… ஹார்ட்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், 2003-ஆம் ஆண்டு ‘கஜினி’ படத்திற்காக சூர்யாவை நேர்காணல் செய்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அப்போது ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சூர்யா மன்னிப்பு கேட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், அந்த மனிதநேய பண்பே சூர்யாவுக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று என தெரிவித்தார்.

நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் மேக்னா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை இயக்குநர் சிறப்பாக வடிவமைத்திருந்ததாக கூறினார். சூர்யாவுடன் இணைந்து நடிப்பதில் ஆரம்பத்தில் பயம் இருந்ததாகவும், ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் அளித்த ஊக்கம் தன்னுடைய பதற்றத்தை போக்கியதாகவும் தெரிவித்தார்.

நடிகை ராதிகா சரத்குமார், படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து மெதுவாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கதை சொல்லி வெற்றி பெற்றிருப்பது பெருமையாக இருப்பதாக கூறிய அவர், இயக்குநர் வெங்கி அட்லூரியின் எழுத்தை வெகுவாக பாராட்டினார்.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை கணவர் சரத்குமாருடன் திரையரங்கில் பார்த்ததாகவும், படம் முடிந்ததும் அவர் “I love this movie” என பாராட்டியதாகவும் ராதிகா தெரிவித்தார். மேலும், ‘சூரியவம்சம்’ படத்திற்குப் பிறகு தான் மிகவும் ரசித்த குடும்பப் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்றும் குறிப்பிட்டார்.

நடிகை மமீதா பைஜூ, படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இதுவரை படத்தை பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனநிறைவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் இணைந்துள்ளதாகவும், தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

‘வாத்தி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு வெங்கி அட்லூரியே முக்கிய காரணம் என்றும் கூறினார். ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசையை ஹைதராபாத்தில் பலரும் நேரடியாக பாராட்டியது தனக்கு கிடைத்த உண்மையான வெற்றி என குறிப்பிட்டார்.

மேலும், படத்தின் இறுதிக்கட்டத்தில் வெறும் மூன்று நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கியதாகவும், அந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், தனது முதல் நேரடி தமிழ் படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். பத்திரிகையாளர் காட்சிக்கு முன்பு தான் பதற்றத்தில் இருந்ததாகவும், ஆனால் படம் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் தன்னை பாராட்டி, கை குலுக்கி, கட்டியணைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.

மமீதா பைஜூவை சிறந்த நடிகை என்றும், தனக்கு கிடைத்த தங்கை என்றும் பாராட்டிய வெங்கி, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பதை பெருமையாக குறிப்பிட்டார்.

சூர்யா குறித்து பேசிய வெங்கி அட்லூரி, குடும்பக் கதையை கேட்டவுடன் எந்த தயக்கமும் இன்றி நடிக்க ஒப்புக்கொண்டது அவரது துணிச்சலையும், ரசிகர்கள் மீதான அன்பையும் காட்டுகிறது என்றார். மேலும், சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூலை கடந்ததாக வணிக வட்டாரத்தில் ஒருவர் தெரிவித்ததை கேட்டு சிலிர்த்ததாகவும் கூறினார்.

ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும், திரையரங்குகளில் ஒலிக்கும் ஒவ்வொரு கரவொலிக்கும் நன்றி தெரிவித்த இயக்குநர், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ மட்டுமல்ல, ‘விஸ்வநாத் குடும்பத்தினருக்கும்’ தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

Mamitha BaijuRaadhika SarathkumarRaveena TandonsuriyaSuriya’s Viswanath and Sons Success The Cast and Crew Speak with EmotionVenky AtluriViswanath and Sons