சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர், காவேரி என்ற கதாபாத்திரத்தில் அன்பான மனைவியாகவும், பாசமிக்க தாயாகவும் நடித்துள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்தில், காவேரி மற்றும் ரவி தேஜாவின் கதாபாத்திரங்களுக்கு இடையேயான அன்பும் நெருக்கமும் ஏற்கனவே வெளியான புரமோஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தனது கதாபாத்திரம் குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில், “காவேரி எனக்கு மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரம். கதையைக் கேட்டபோதே சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருப்பதால் காவேரி கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமானதாக மாறியது” என்றார்.
ரவி தேஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய அவர், “ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். அவர் அனைவரிடமும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்களும், அவர்களுடன் உருவாகும் நினைவுகளும் நம் வாழ்க்கையில் முக்கியமான பகுதிகளாக மாறிவிடும். அப்படியான ஒரு அழகான பயணமாக ‘இருமுடி கட்டு’ அமைந்தது” என்றார்.
“இந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினருக்கும் நன்றி. படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த உலகத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இணைந்திருக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்தையும் அதன் கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என பிரியா பவானி சங்கர் கூறினார்.
சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பையும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பையும் கவனித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் சிவா நிர்வாணா கூட்டணியில் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.