ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகி வரும் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது ஒப்பந்த மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வழக்கு விசாரணை முடிவடையும் வரை ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல், விநியோகித்தல் அல்லது வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மலையாளத்தில் உருவாகும் ‘த்ரிஷ்யம் 3’ படத்தைத் தழுவி உருவாகும் இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை அபிஷேக் பதக் இயக்குகிறார்.
- Advertisement -
இந்த வழக்கு செப்டம்பர் 29, 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், M/s. Rugan and Arya நிறுவனத்திற்காக மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் தங்களது பதில் மனுவை தாக்கல் செய்வதற்காகவும், வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்காகவும் அக்டோபர் 1, 2026-க்கு ஒத்திவைத்துள்ளது.
‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பின் எதிர்கால வர்த்தகப் பயன்பாடு தொடர்பாக தங்களுக்குள்ள ஒப்பந்த உரிமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு, அவை சட்டப்படி உரிய முறையில் தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்வோம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.