ஏகே மற்றும் அவரது ஃபேன்ஸ் குறித்து சினேகா பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்..
‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய அரசு அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கியது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரும் பல வருடங்கள் கழித்து பேட்டியும் கொடுக்கிறார். இந்நிலையில், அஜித்துடன் ‘ஜனா’ படத்தில் நடித்த சினேகா ஏகே குறித்து பேசுகையில்,
‘ஜனா படத்தில் நடித்தபோது ஏகப்பட்ட ரசிகர்கள் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வருவார்கள். அப்படி வருபவர்களிடம் அஜித், நீங்கள் வரிசையில் அமைதியாக வாருங்கள். ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வார். அவர்களும் அவர் சொன்னதை கேட்பார்கள். ஷூட்டிங் முடிந்து பொறுமையாக அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
அதை பார்க்கும்போது, அவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு எளிமையாக இருப்பார். தன்னைப் போலவே தன்னுடைய ரசிகர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார் அவர்’ என்றார். தற்போது ‘தல’ ரசிகர்களால் இத்தகவல் வைரலாகி தெறிக்கிறது.