பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ (Atrocity) பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான பாடலின் புரோமோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில், இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால் மற்றும் வெங்கயோ ஆகியோர் குரலில் உருவாகியுள்ள ‘அட்ராசிட்டி’ பாடல், இளமை துள்ளலும், நகைச்சுவையும், காதல் உணர்வுகளும் கலந்த ஒரு உற்சாகமான மெலடியாக அமைந்துள்ளது. மாடர்ன் திருமண வாழ்க்கையில் நிகழும் கலகலப்பான தருணங்களை நகைச்சுவை கலந்த காட்சிகளுடன் சித்தரித்திருப்பது பாடலின் சிறப்பாக பேசப்படுகிறது.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் இளன், முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன், கணவரே மாமியார் வீட்டில் வசிக்கும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், உறவுகள் மற்றும் நகைச்சுவையை புதிய கோணத்தில் சொல்லவுள்ளது.

மேலும், ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத சம்பவங்களையும், குடும்ப உறவுகளின் கலகலப்பையும் மையமாகக் கொண்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம், ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் பிரத்யேகமாக வெளியாகிறது.

ElanPyaar Prema KalyanamPyaar Prema Kalyanam First Single Atrocity ReleasedSaanveYuvan Shankar Raja