பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் நடிகர் சசிகுமார், நடிகைகள் அபர்ணா தாஸ், அனகா மருதோரா, யஷ்வந்த், விவேக் பிரசன்னா, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடரின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்தனர்.
தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில், “ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ‘மூஸா ராசா’வின் கதை எங்களுக்கு முதல் முறையிலேயே பிடித்துவிட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு சசிகுமார் மிகச் சரியான தேர்வாக இருந்தார். மேலும், மதுரையின் வாழ்க்கை முறையை இயல்பாக திரையில் கொண்டு வர இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பல மாதங்கள் அங்கு தங்கி ஆய்வு செய்தது இந்த தொடரின் பலமாக அமைந்துள்ளது” என்றனர்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசும்போது, “‘வதந்தி’ முதல் சீசன் எதிர்பார்ப்பின்றி வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது சீசனை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் அதிக நேரம் செலவிட்டோம். 43 நாட்கள் தொடர்ந்து மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் கடின உழைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்றது” என்றார்.
நடிகர் சசிகுமார் கூறுகையில், “முதலில் ‘மணி’ என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் இயக்குநர் என்னை ‘மூஸா ராசா’ என்ற போலீஸ் அதிகாரியாக கற்பனை செய்திருந்தார். அந்த கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு வழக்கமான போலீஸ் கதை அல்ல; ஒரு நிரபராதியை காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் கதை. இந்த தொடர் வெளியான பிறகு மேலும் பல போலீஸ் கதாபாத்திரங்கள் என்னை தேடி வரும் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகை அபர்ணா தாஸ், “‘டாடா’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்ல கதைக்காக காத்திருந்தேன். ‘சுமையா’ கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. மேலும், சசிகுமாருடன் இணைந்து நடித்தது எனது நீண்ட நாள் கனவு” என்று தெரிவித்தார்.
அனகா மருதோரா, விவேக் பிரசன்னா, யஷ்வந்த் ஆகியோரும் இயக்குநர், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து, இந்த தொடர் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், “முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் முற்றிலும் வேறுபட்ட இசை அனுபவத்தை வழங்கியுள்ளோம். இந்த முறை இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. அவையும் ரசிகர்களை கவரும்” என்றார்.
குற்றப்புலனாய்வு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’, ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழுடன் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில், 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.