நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.
குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ள தகவல் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!
சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. ‘கருப்பு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இது சூர்யாவின் நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது.
- Advertisement -
மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு ஜானர்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய தயாரிப்பாளர் நாக வம்சி – இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி, மீண்டும் ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை இப்படத்தின் மூலம் வழங்கியுள்ளனர்.
சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.