ராஷ்டிரபதி பவனில் கௌரவிக்கப்பட்ட பிரியங்கா மோகன்: தென்கொரிய அதிபருடன் சந்திப்பு!

Web Ads

இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த உயரிய நிகழ்வில், தென்னிந்தியத் திரையுலகின் இளம் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதிபரை நெகிழ வைத்த ‘மேட் இன் கொரியா’

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்ட நிலையில், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மற்றும் அவரது மனைவி கிம் ஹீ கியுங் ஆகியோர் பிரியங்கா மோகனை நேரில் சந்தித்தபோது அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளனர். தான் அறிமுகமான உடனேயே, “நான் உங்கள் திரைப்படத்தைப் பார்த்தேன்” என்று அதிபர் கூறியது பிரியங்காவிற்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

வாழ்நாள் கனவு நனவான தருணம்

இந்தச் சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பிரியங்கா மோகன், “ராஷ்டிரபதி பவனுக்குள் செல்வது எனது நீண்ட நாள் வியப்பு. அங்குள்ள அமைதியான சூழலையும் மரியாதையையும் ரசித்தேன். ஒரு நாட்டின் அதிபர் எனது படத்தைப் பார்த்திருக்கிறார் என்பதும், அவருடன் அமர்ந்து உணவு அருந்துவதும் ஒரு கனவு போல உள்ளது. கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது என் விஷயத்தில் உண்மையாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.