ராமர் கெட்அப்பில் மகேஷ்பாபுவை பார்த்து வியந்துபோனேன்: ராஜமவுலி வாய்ஸ்..

‘பாகுபலி’ ஆர்.ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது தெரிந்ததே. தற்போது மகேஷ்பாபுவுடன் இணைந்து உருவாகும்’ படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில், காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
‘மந்தாகினி’ என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இச்சூழலில் ‘வாரணாசி’ படம் பற்றி ராஜமவுலி தெரிவிக்கையில், ‘என் சிறுவயதிலிருந்தே ‘ராமாயணம்’ மற்றும் ‘மகாபாரத’ இதிகாசங்களை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். ‘மகாபாரதம்’ எனது கனவுப் படம். இந்த ‘வாரணாசி’ படத்தில் பணிபுரியத் தொடங்கியபோது, ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை நான் படமாக்குவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை.
இப்படத்திற்காக முதல் நாள், ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில் மகேஷ்பாபு, ராமர் கெட்டப்பில் மேக்கப் போட்டதைப் பார்த்து உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. அந்தப் புகைப்படத்தைத்தான் நான் கொஞ்ச நாள் என் மொபைல் வால்பேப்பராக வைத்திருந்தேன்.
இந்த இராமாயண எபிசோடை 60 நாள்கள் படமாக்கினோம். ஒவ்வொரு நாளும் ஒரு சவாலாக இருந்தது. இது எனக்கும் மகேஷ் பாபுவுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மகேஷ்பாபு இதில் ராமராக நடித்திருக்கிறார். இந்த இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

