ரஜினியின் ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.!
‘அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய் இருக்கக் கூடாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்’ என்பதே ‘வேட்டையன்’ படத்தின் மையக்கரு. இதில், போலீஸ் (எஸ்ஐ) அதிகாரியாக ரஜினி களம் ஆடி இருக்கிறார்.
இந்தியாவின் நம்பர் ஒன் அகாடமியாக ‘நேட்’ (NAT) நிறுவனம் செயல்படுகிறது. இதனை (ராணா டகுபதி) நட்ராஜ் நடத்துகிறார். இந்த அகாடமி மூலம் லட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி அளிப்பதாக மார்க்கெட்டிங் செய்து, மாபெரும் மோசடி செய்கிறார். ஏழை மாணவர்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
இந்த உண்மை வெளிவராமல் இருக்க, திரை மறைவில் சில போலீஸ் அதிகாரிகளும், ஸ்கை (SKY) என்ற அபிராமி நடத்தும் டிவி சேனலும் பணத்துக்காக, நட்ராஜூக்கு துணை புரிகின்றன.
இந்நிலையில், இந்த கிரிமினல் சம்பவங்களை எல்லாம் துணிச்சலாக வெளிக்கொணர முயல்கிறாள் கன்னியாகுமரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை (துஷாரா) சரண்யா. இதனால், அவள் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாய் கொலை செய்யப்படுகிறாள். இதனால், குற்றவாளியை கண்டுபிடித்து என்கவுன்டர் செய்யும்படி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது. இது அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
‘இந்த நாட்டுல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்ல, பொறுக்கிங்கதான் பாதுகாப்பா இருக்காங்க’ என கொந்தளிக்கும் வசனம், பெண்களின் வலியை பிரதிபலிக்கிறது, சிந்திக்க வைக்கிறது.
இதனைத் தொடர்ந்து, ரஜினியின் அனல் பறக்கும் விசாரணையில் ‘குணா’ என்ற லேப்டாப் சர்வீஸ் செய்யும் இளைஞன் கண்டுபிடிக்கப்பட, என்கவுன்டரில் போட்டுத் தள்ளுகிறார்.
இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்டாக, ‘ஆசிரியை சரண்யாவை கொலை செய்தது குணா அல்ல’ என ரஜினிக்கு தெரிய வர அதிர்ச்சி அடைகிறார்.
‘குற்றவாளியை தப்பிக்க விட்டுட்டு, ஒரு அப்பாவியை என்கவுன்டர் பண்ணிருக்கோம்; நாம பண்ணுனது என்கவுன்டர் இல்ல, மர்டர்’ என ஏதோ யோசிக்க.. திரில்லிங்கான சஸ்பென்ஸாய் இன்டர்வெல் விடப்படுகிறது.
பின்னர், பரபரப்பாய் தெறிக்கும் காட்சிகளில், ‘ஆசிரியை சரண்யாவை கொலை செய்த மர்ம நபரை ரஜினி பிடித்து விடுகிறார். விசாரிக்க முயற்சிக்கையில், அந்நேரம் ‘யாரோ ஒருவரால்’ குண்டடிபட்டு மர்ம நபர் இறந்து விட.. இதனால், குற்றத்தின் முழுமையான பின்னணி யார்? என்பது தெரியாமலே போகின்றது.
இறுதிக்கட்டமாய் கொதிக்கும் ரஜினியின் தீவிர விசாரணையில், ‘கல்வியை வைத்து இமாலய வியாபாரம் செய்து மாஃபியாவாக உலா வந்து திமிரும் (ராணா) நட்ராஜ்தான் அனைத்துக்கும் காரணம்’ என ஆதாரம் கிட்ட, அவரை அரெஸ்ட் செய்ய முனைகிறார். அந்த நொடியே அவரது செல்போன் ஒலித்து, கண்டிப்புடன் மேலிடத்திலிருந்து உத்தரவிடப்படுகிறது.
உடனே, பொருளாதார குற்றப்பிரிவுக்கு, டிரான்ஸ்பராக மாற்றப்படுகிறார். அப்போது, ‘உன்னால மட்டுமல்ல, உன் சட்டத்தாலேயும் என் மயிரைக் கூட புடுங்க முடியாது’ என ராணா கர்ஜிக்கும் வில்லத்தனம் தீயாய் சுடுகிறது.
அடுத்தடுத்து நிகழும் ரணகளமான காட்சிகளின் முடிவாக, ‘குணா’ என்ற ஏழை இளைஞன் நிரபராதி என மீடியா முலம் மக்களுக்கு உணர்த்துகிறார் ரஜினி. அத்துடன், கல்வி மாஃபியா ராணாவுக்கு, ‘நீ தினம் தினம் சாகனும்’ என கூறி, வாழ்நாள் சிறை தண்டனை வாங்கிக் கொடுகிறார்,
அப்படியே நம்மை பார்த்து, “குறி வெச்சா இரை விழனும்’ என ஸ்டைலாக தனக்கே உரிய பன்ஜிங் டயலாக் பேசி சிரிக்க படம் நிறைவு பெறுகிறது.
இப்படத்தில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடனமாடி, குடும்ப விளக்காகவும் நிமிர்ந்து நிற்கிறார். பகத் பாசிலின் பிரில்லியன்ட் ப்ரைன் அருமை. மேலும், அவ்வப்போது அடிக்கும் கமெண்ட்ஸ் மிகவும் ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் முதுகில் குண்டு பாய்ந்து சரிந்து பரிதாபமாய் இறக்கும் நிகழ்வு அனைவரின் மனதையும் கனக்கச் செய்கிறது; கண்களை குளமாக்குகிறது. சிரிக்க வைத்த பகத் பாசிலை ஆடியன்ஸால் நிச்சயம் மறக்க முடியாது.
படத்தில், ரித்திகாவும் ரோகிணியும் கதையின் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். இவர்களின் இன்வால்வ்மென்ட் பாராட்டுக்குரியது.
அனிருத்தின் பின்னணி இசை பட்டையை கிளப்பியிருக்கிறது. எரிதணலாய் சீனுக்கு சீன் ஊடுருவிப் பரவி சிறப்பாய் உறுமியிருக்கிறது. எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு, போலீஸ் டிப்பார்ட்மென்டில் அடிக்கடி ஒலிக்கும் ‘எஸ் ஆர்’ என்ற சொல் போல, சூரியக் கதிர்களாய் எவ்வரி ஃப்ரேம்களையும் வார்த்திருக்கிறார்’ எனலாம்.
மொத்தத்துல படம் எப்படி இருக்குன்னா.. ‘வேட்டையன் டீம் வெச்ச குறியில, மெகா வெற்றி என்கிற இரை விழுந்திருக்கு..!