சிக்மா திரை விமர்சனம்

லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ளார்.
அம்மாவின் நினைவாக ஒரு நூலகத்தை நடத்தி வருகிறார் குரு (சந்தீப் கிஷன்). அப்பா விட்டுச் சென்ற கடன் ஒருபக்கம், அந்தக் கடனை அடைக்கா விட்டால் அம்மாவின் நினைவாக இருக் இருக்கும் நூலகத்தையே இழக்க வேண்டிய சூழல் காரணமாக பணத்தைத் தேடி ஓட வேண்டிய கட்டாயம்.
அந்தத் தேடல் அவரை சூதாட்ட விடுதிக்குக் கொண்டு செல்கிறது. அங்கே எதிர்பாராமல் கையில் கிடைக்கும் ஒரு பென்டிரைவ், அதற்குள் இருக்கும் ரகசியங்கள், பல கோடி ரூபாய் பணம், அதைத் தேடி வரும் கும்பல் என குருவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் ‘சிக்மா’.
குருவாக சந்தீப் கிஷன் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் சாதாரண இளைஞனாகவும், திடீரென மிகப்பெரிய குற்றவலைக்குள் மாட்டிக்கொண்ட பிறகு அதிலிருந்து தப்பிக்க போராடும் இடங்களிலும் தனது பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது உழைப்பு தெரிகிறது.
ஃபரியா அப்துல்லாவுக்கு துறுதுறுப்பான கதாபாத்திரம். ஆனால் கதையின் முக்கிய ஓட்டத்தில் இன்னும் அழுத்தமாக அவரைப் பயன்படுத்தியிருக்கலாம். சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட வில்லன் கதாபாத்திரங்கள் கதைக்குத் தேவையான அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்றாலும், இன்னும் கொஞ்சம் வலுவாக எழுதப்பட்டிருந்தால் குருவின் போராட்டமும் அதற்கேற்ப பெரிதாகத் தெரிந்திருக்கும். குறிப்பாக ஷிவ் பண்டிட் போன்ற நடிகரை கொண்டு வரும் பொழுது அவருக்கான கதாபாத்திரம் இன்னும் கனமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் எடுத்துக்கொண்டிருப்பது ஹெய்ஸ்ட், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த களம். முதல் படத்திலேயே பெரிய கதைக்களத்திற்குள் இறங்கியிருப்பதில் அவரது நம்பிக்கை தெரிகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் விதைக்கப்படும் சில விஷயங்களை பின்னர் கதையுடன் இணைக்கும் இடங்களில் இயக்குநரின் திட்டமிடல் அருமை.
‘சிக்மா’வின் சிக்கலும் அதே திரைக்கதையில்தான் இருக்கிறது. பல கோடி பணம், பென்டிரைவ், ரகசிய சாவி, அதைத் துரத்தும் வில்லன்கள் என ஒரு பரபரப்பான விளையாட்டுக்கான அத்தனை காய்களும் களத்தில் இருக்கின்றன. ஆனால் அவை கொடுக்க வேண்டிய பதற்றமும் பரபரப்பும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. சில காட்சிகள் கணிக்க முடிகிறது.
குறிப்பாக கதாபாத்திரங்களை நிறுவுவதற்காக முதல் பாதி எடுத்துக்கொள்ளும் நேரம் படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அதிகரித்தாலும், திரைக்கதையில் இன்னும் சில எதிர்பாராத திருப்பங்கள் இருந்திருந்தால் ‘சிக்மா’வின் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
தமனின் பின்னணி இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்தின் பிரம்மாண்டத் தன்மைக்கு உதவுகின்றன. சண்டைக் காட்சிகளிலும் தயாரிப்பின் உழைப்பு தெரிகிறது.
விஜய்யின் மகன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் முதல் படம் இயக்க வருவது ஜேசன் சஞ்சய்க்கு பலமாகவும் அதே நேரத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கும் சுமையாகவும் மாறி இருக்கிறது. அந்த அடையாளத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், முதல் படத்திலேயே ஒரு முழுநீள கமர்ஷியல் ஆக்ஷன் படத்தைக் கையாள முயன்றிருக்கிறார். இன்னும் தேவையில்லாத ஆக்சன் காட்சிகளை புகுத்தி எடுக்காமல் ஹெய்ஸ்ட் மொமென்ட்களை அதிகப்படுத்தி இருந்தால் திருக்கதையில் விறுவிறுப்பக் கூடியிருக்கும். பார்க்கிங் ஆக்சன் புதுமையான ஒரு முயற்சி.
மொத்தத்தில் ‘சிக்மா’ – பர பர ஆக்ஷன் காட்சிகளுக்கு நடுவே இன்னமும் ஹெய்ஸ்ட் தருணங்களை கூடுதலாக கொடுத்திருந்தால் இந்த வார வெளியீட்டில் டாப் இடம் பிடித்திருக்கும்.

சிக்மா திரை விமர்சனம்
வழக்கமான ஆக்ஷன் கமர்சியல்!
- Rating