சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை: நடிகர் தேர்வுக் குறித்து பரவும் போலித் தகவல்கள்!

Web Ads

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ (SivaKarthikeyan Productions) மூலம் தரமான படங்களை வழங்கி வரும் இவர், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபகாலமாக, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரில் புதிய படங்களுக்கு நடிகர்/நடிகைகள் தேர்வு நடைபெறுவதாகக் கூறி சில நபர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த, அந்த போலி மெசேஜ்களைப் பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்

பிரதிநிதிகள் யாரும் இல்லை: நடிகர் தேர்வு தொடர்பாக எந்தவொரு இயக்குநரையோ, ஒருங்கிணைப்பாளர்களையோ (Coordinators), காஸ்டிங் ஏஜெண்ட்களையோ அல்லது மூன்றாம் தரப்பு நபர்களையோ நிறுவனம் நியமிக்கவில்லை.

அதிகாரப்பூர்வ தகவல்: நடிகர் தேர்வு குறித்த அறிவிப்புகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும்.

நம்ப வேண்டாம்: இதற்கு மாறாக வரும் வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

சட்ட நடவடிக்கை: சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வளர்ந்து வரும் கலைஞர்களின் ஆர்வத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புடன் இருக்குமாறு சிவகார்த்திகேயன் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்தொடர ரசிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.