ரேனிகுண்டா 2: மீண்டும் மிரட்ட வரும் கேங்ஸ்டர் கதை!

Web Ads

கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படம், அதன் யதார்த்தமான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜானி, சனுஷா நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும் அக்காலத்தில் ஹிட் அடித்தன. தற்போது சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘ரேனிகுண்டா 2’ என்ற பெயரில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பன்னீர்செல்வமே இந்தப் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கதாநாயகியாக ஷாலினி நிவாஸ் அறிமுகமாகிறார். மேலும், மறைந்த புகழ்பெற்ற மலையாள நடிகர் திலகனின் பேரன் அபிமன்யு திலகன், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்தில் அவரது சிறப்பான நடிப்பைக் கண்டு கவரப்பட்ட இயக்குநர், இப்படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தை வழங்கியுள்ளார்.

Web Ad 2

தற்போது இப்படத்தின் 95 சதவீதப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக அபிமன்யு திலகன் நடித்துள்ளார். தனக்கான காட்சிகளைச் சுமார் 20 நாட்களில் நடித்து முடித்துள்ள அவர், தமிழ் வசனங்களைப் பேசி நடிப்பதற்கு இயக்குநர் பன்னீர்செல்வம் தனக்கு உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கேங்ஸ்டர் பின்னணியில் வெளியாகும் இந்தப் படம், மீண்டும் ஒரு முறை ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.