Pushpa 2

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: ரஜினி, விஜய் தெரிவித்த இரங்கல் செய்தி

நடிகர் டெல்லி கணேஷ் 400-க்கு மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். குணசித்திர வேடம், மற்றும் நகைச்சுவை வேடம் ஆகியவை இவரது தனித்துவம் ஆகும். இந்நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினி, விஜய் ஆகியோர் இரங்கல் தெரித்துள்ளனர். இது குறித்து காண்போம்..

நடிகர் டெல்லி கணேஷ் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவே, மறைந்துவிட்டார். இருப்பினும் தகவல்கள் இன்று காலையில் இருந்துதான் பலருக்கும் தெரியவந்ததால், பல நட்சத்திரங்கள் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ், தக்‌ஷினா பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். அதனால், இவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் ஏற்பட்டது.

மேலும், டெல்லியில்.. இந்திய விமானப் படையில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர், நாடக சபாவில் பயிற்சி பெற்று, சினிமாவில் படிப்படியாக நடித்து பிரபலமானார்.

டெல்லி கணேஷ் மறைந்ததை அடுத்து விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது.

40 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் , ‘என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.